மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை அந்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பிறகு ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மியான்மரில் சாகெய்ங் கிராமத்தில் வாழும் மக்கள் ராணுவ ஆட்சியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் கிளர்ச்சிக் குழுக்களை அமைத்து தாங்களே பள்ளி மற்றும் மருத்துவமனைகளை சொந்தமாக நடத்துகின்றனர். இந்நிலையில் சாகெய்ங் கிராமத்தில் வாழும் மக்கள் நேற்று திங்யான் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஆரம்ப விழாவிற்காக கூடி இருந்தனர். காலை 8 மணியளவில் ஜண்டா விமானம் அக்கிராமத்தில் குண்டு மழை பொழிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து எம்ஐ35 ரக ஹெலிகாப்டரில் கிராமத்தை சுற்றி வளைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
20 நிமிடங்கள் வரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடக்கம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ராணுவத் தாக்குதலை மியான்மர் ராணுவம் ஒப்புக்கொண்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் எதிர்ப்பாளர்கள் அமைப்பின் அலுவலகம் சாகெய்ங் பகுதியில் காலை எட்டு மணியளவில் திறக்கப்பட இருந்தது. அப்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
மியான்மர் ராணுவத்தின் இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.