இந்தியாவின் அங்கமான அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து தங்களுடைய பகுதி என சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு பகுதிகளுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 பகுதிகளுக்கும் சீனா அதிகாரப்பூர்வ பெயர்களை சூட்டி அதற்கான வரைபடத்தையும் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் சீனா தற்போது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன திபெத்திய பின்யின் என்ற மொழிகளில் பெயர் பெயர்களை சூட்டி வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனா சிவில் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், புதிதாக பெயரிடப்பட்ட 11 பகுதிகளும் திபெத்தின் தெற்கு பதியான ஜங்னான் பகுதியின் கீழ் வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 11 பகுதிகளில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 5 மலை சிகரங்கள், 2 ஆறுகள், 2 குடியிருப்புப் பகுதிகள், 2 நிலப்பகுதிகள் அடங்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த செய்தியினை சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த செயலுக்கு, “சீனா இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதனை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அப்போதும் இருந்தது, இனி எப்போதும் இருக்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டும் முயற்சியால் இந்த உண்மையை மாற்ற முடியாது” என்று இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.