ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்திருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் தொடர்கிறது.
நீண்டகாலமாக ஆப்கானிஸ்தானில் நீடித்து வந்த போர் பரபரப்பு நேற்று (15/08/2021) முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்தாலும், மக்களின் பதற்றம் இன்னும் தணியவில்லை. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். அதேநேரத்தில் அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி வெளிநாட்டுக்குத் தப்பித்துச் சென்றுவிட்டார். ரத்தக் களறி ஏற்படுவதைத் தவிர்க்கவே வெளியேறியதாக அவர் விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைந்திருப்பதால், அங்கிருந்து வெளிநாடுகளின் தூதர்கள், மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறி வருகின்றனர். ரஷ்யா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர பிற நாட்டுத் தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு மக்கள் தங்களது நாடுகளுக்குச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். ஆனால், காபூல் விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால், இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று (15/08/2021) தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் மத்திய அரசு துரிதமாகச் செயல்பட்டு, ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி முதற்கட்டமாக 129 இந்தியர்களை மீட்டு வந்தது. அதன் பிறகு, நேற்று இரவு காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வெளிநாட்டினர் தாயகம் திரும்ப காபூல் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களும் தாலிபான்களிடம் இருந்து தப்பிக்கக் கூட்டம் கூட்டமாக விமான நிலையத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர். கூட்டம் அதிகரித்ததால், அதனைக் கட்டுப்படுத்த அமெரிக்கப் படைகள் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காவே காரணம் எனக் கூறி, ஆப்கானிஸ்தானியர்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகள் ஆப்கானிஸ்தானைக் கைவிட்டுவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னதாக ஐ.நா. பொதுச்செயலாளர், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடுகிறது. அதேபோல், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தை நடத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தலிபான்களுடன் நாளை (17/08/2021) பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தலிபான்களுடன் நட்பை விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.