உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து கரோனா வைரஸ் குறித்து சீனாவிற்குச் சென்று ஆய்வு நடத்த உலக சுகாதார நிறுவனம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. முதலில் இந்தக் குழுவை தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளிக்காத சீனா, உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு அனுமதியளித்தது.
இதன்தொடர்சியாக சீனாவில் ஆய்வு நடத்திய நிபுணர் குழு, சீன ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை என தெரிவித்தது. மேலும் வௌவாலிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்தது. இதுதொடர்பான ஆய்வறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (30.03.2021) வெளியானது. அதில், கரோனா வைரஸ், முதலில் வௌவாலில் இருந்து விலங்குகளுக்குப் பரவி, பின்னர் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்ததோடு, ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு மிகவும் சாத்தியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள், நிபுணர் குழு ஆய்வு தாமதப்படுத்தப்பட்டதாகவும், நிபுணர் குழுவிற்கு முழுமையான மற்றும் உண்மையான தரவுகள் வழங்கப்படவில்லை என கூறி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்தநிலையில், கரோனா தோற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தியோட்ரோஸ் கெப்ரேயஸ் உரையாற்றினார். அப்போது அவர், “கரோனா வைரஸ், ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், "நிபுணர் குழு ஆய்வு, போதுமான அளவு விரிவானது என்று நான் நம்பவில்லை. வலுவான முடிவுகளை அடைவதற்கு மேலும் தரவுகளும் ஆய்வுகளும் தேவைப்படும். ஆய்வகத்திலிருந்து கசிந்தது என்பது மிகச்சிறிய கருதுகோளாக இருந்தாலும், இதுகுறித்து சிறப்பு நிபுணர்களுடன் கூடிய கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது. சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க நான் தயாராக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், நிபுணர் குழு மூல (மாற்றம் செய்யப்படாத) தரவுகளை அணுகுவதில் சிக்கல்களைச் சந்தித்ததாக கூறியதாகவும், சீனா இன்னும் தரவுகளைத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். மீண்டும் சீனாவில் ஆய்வு நடத்த தயார் என்ற ரீதியிலான உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பும், கரோனா ஆய்வகத்திலிருந்து வெளியானதா என்பது குறித்து மேலும் விசாரணை என்ற அறிவிப்பும் சீனாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.