மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது இராணுவம் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இப்போராட்டத்தில் கலந்துகொள்ள முயன்ற உயர்நிலை கல்வி படிக்கும் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு சமூகவலைதளங்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தையும் மியான்மர் அரசு அறிவித்தது.
இந்தநிலையில், போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது, நேற்று (28.02.2021) மியான்மர் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரழந்ததாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம், "போலீஸ் மற்றும் இராணுவப் படைகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி - குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளார், மியான்மர் இராணுவத்தை எச்சரிக்குமாறு, உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர், "தேர்தல் மூலம் வெளிப்பட்ட மியான்மர் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும், அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் ஒன்று கூடி இராணுவத்திற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புமாறு பொதுச்செயலாளர் கேட்டுக்கொள்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலியான இணைய நெட்வொர்க் பொறியாளர் ஒருவர், தாக்குதலுக்கு முதல்நாள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க எத்தனை இறந்த உடல்கள் தேவை எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.