கர்தார்பூர் வழித்தடம் இன்னும் இரண்டு நாட்களில் திறக்கப்பட உள்ள நிலையில், அந்த வழியில் பயணிக்க இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை என பாகிஸ்தான் ராணுவம் கூறுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா சீக்கியர்களுக்கான புனித இடமாகும். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ,அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாராவும் அமைக்கப்பட்டது. இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக உள்ளது. எனினும், இப்பகுதி பாகிஸ்தானில் உள்ளதால், இந்தியர்கள் விசா வாங்கி அங்கு செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தது. இதன் காரணமாக இருநாடுகளும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி கர்தார்பூர் குருத்வாராவுக்கு செல்ல இந்திய எல்லையிலிருந்து வழித்தடம் அமைக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 9-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இதன் வழியாக பயணிக்க இந்தியாவிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என இம்ரான் கான் அறிவித்துள்ள நிலையில், யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் திடீரென அறிவித்துள்ளது. பிரதமரும், ராணுவமும் மாறிமாறி பேசுவதால் சீக்கிய மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.