பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இருந்த இந்து கோவில், 1997ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு இந்த கோயில் மீண்டும் கட்டப்பட்டு வந்தது.
இருப்பினும் இந்தக் கோயிலைக் கட்ட, ஒதுக்கப்பட்ட நிலத்தை விட கூடுதல் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி, ஒரு கும்பல் கோயிலை இடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், கோயிலைத் திரும்ப கட்டக்கோரி, கராச்சியில் பேரணி நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, கோயிலை இடித்ததாக 350க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜமாயத் உலேமா-இ-இஸ்லாம் என்ற கட்சியின் தலைவர் ரெகுமத் சலாம் கட்டக் என்பவர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடிக்கப்பட்ட இந்து கோயில் மீண்டும் கட்டித்தரப்படும் என்று பக்துன்கவா மாகாண அரசு அறிவித்துள்ளது. இந்து கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக, இந்தியாவும் பாகிஸ்தானிடம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.