உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்று ஃபேஸ்புக் (FACEBOOK) ஆகும். ஆனால் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்குவது , தேவையற்ற பதிவுகள் போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு தொழில் நுட்பங்களை ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 300 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு மாதத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் கணக்குகளில் சுமார் 5% சதவீதம் போலி கணக்குகள் உடையோர்கள் என ஃபேஸ்புக் நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 1.2 பில்லியன் போலி கணக்குகளும் 2019 ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 2.19 பில்லியன் போலி கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக் நிறுவன துணைத் தலைவர் கை ரோசென் கூறுகையில், “ஒரே நேரத்திலேயே பல போலி கணக்குகள் தொடங்கப்படுவது எங்களைக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உட்படுத்துகிறது. ஒவ்வொரு 10 ஆயிரம் பதிவுகளிலும் 11 முதல் 14 பதிவுகள் தேவையற்ற தகவல்கள் பதிவிடுதல் மற்றும் சமுதாயத்திற்கு எதிரான கருத்துக்கள் போன்றவை அதிக அளவில் பதிவிடப்படுகிறது. அதேபோல், 10ஆயிரம் பதிவுகளில் 25 பதிவுகள் வன்முறைக்கு வழிவகுப்பதாகவே உள்ளன. இதனாலேயே நடவடிக்கைகள் கடுமையாக உள்ளன” எனக் குறிப்பிட்டார். மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் பாதுகாப்பாக ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் வகையில் பல்வேறு புதிய தொழில் நுட்பத்தை கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.