சீனாவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் தற்போது மக்கள் தொகை முதல் முறையாக குறைந்துள்ளது. இது தொடர்பாக அண்மையில் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் செய்தியால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, சீனாவில் காதலர்களைத் தாக்கும் புதிய நோய் ஒன்று வெளியுலகத்திற்கு வந்துள்ளது. சீனாவில் காதலி ஒருவர் தன்னுடைய காதலருக்கு 100க்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
குறிப்பாக வல்லவன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ரீமாசென் தொடர்ந்து போன் செய்து டாக்சிக் கொடுக்கும் காட்சியைப் போன்று உண்மையான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷியாஹு என்ற 18 வயது பெண் ஒருவர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இளைஞரும் அவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் மற்ற காதலர்களைப் போலவே செல்போனில் பேசுவது பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில் ஷியாஹுவிற்கு இளைஞர் மீதான காதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அவர் தன்னை சார்ந்து இருக்க வேண்டும்; தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்த ஷியாஹு தொடர்ந்து தொலைபேசி மூலம் அவரை அழைத்துள்ளார். இதில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட முறை போன் செய்து காதலனிடம் விசாரிப்பது போன்ற செயல்கள் அந்த இளைஞருக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.
அன்றாட செயல்களைக்கூட செய்ய முடியாத அளவுக்கு அடிக்கடி போன் வருவது குறித்து அப்பெண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இருப்பினும் விடாத அப்பெண் 100க்கும் மேற்பட்ட முறை அவருக்கு போன் செய்துள்ளார். போனை எடுக்காததால் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார். இதனையடுத்து இளைஞரின் புகாரின் பேரில் அப்பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மருத்துவர் ரீதியாக பாதிக்கப்பட்டதை அறிந்து மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு செய்த ஆய்வில் அவர் 'லவ் பிரைன் டிஸார்டர்' என்ற புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.