உலகின் பிரச்சனைக்குரிய நாடுகளில் ஒன்று சீனா. உள்நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங், திபெத் மீதான அடக்குமுறை, அண்டை நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிப்பது போன்ற நடவடிக்கைகளால் சீனா, சர்வதேச அளவில் விமர்சனங்களுக்கும், கண்டிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவும் சீனாவிற்கெதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், சீனா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இருப்பு வைக்கும் கிடங்குகளை ஏற்படுத்திவருவது தெரியவந்துள்ளது. ஜேம்ஸ் மார்ட்டின் சென்டர் ஃபார் நான்ப்ரோலிஃபெரேஷன் ஸ்டடீஸைச் சேர்ந்த நிபுணர்கள், பிளானட் என்ற வர்த்தக நிறுவனம் வழங்கிய செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.
கன்சு மாகாண பாலைவனத்தில் 700 சதுர மைல்கள் பரப்பளவில், சுமார் 119 ஏவுகணை கிடங்குகளை சீனா அமைத்திருப்பதாகவும், இவை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அணுஆயுத ஏவுகணைகளை இருப்பு வைக்க உருவாக்கப்பட்டிருக்கலாம் என செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அந்தப் பகுதியில், நிலத்திற்கு அடியிலான பதுங்கு குழிகள், சிறிய இராணுவ தளம் ஆகியவை இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிலத்திற்கு அடியிலான பதுங்கு குழிகள், ஏவுகணைகளை ஏவுவதற்காக பயன்படுத்தப்படலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இந்தக் கட்டுமானங்கள் சீனா, தனது அணு ஆயுதத் திறனை விரிவுபடுத்திவருவதைக் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அணு ஆயுதப் படைகளின் தலைவர், சீனா வேகமாக தனது அணு ஆயுதத் திறனை விரிவுசெய்துவருவதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலக நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துவரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.