Skip to main content

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் மார்பர்க் வைரஸின் முதல் பாதிப்பு - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

marburg virus

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் மார்பர்க் வைரஸின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் போன்ற கொடிய வைரஸான இந்த மார்பர்க் வைரஸின் பாதிப்பு இதற்கு முன்பு ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கென்யா, உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டிருந்தாலும் மேற்கு ஆப்ரிக்காவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை.

 

கினியா நாட்டில் ஜூலை 25ஆம் தேதி ஒருவருக்கு அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த நபர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடற்கூறாய்வு மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

 

இந்த மார்பர்க் வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் என்பதும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 88 சதவீதம் உயிரிழப்பு உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் உமிழ் நீர், வியர்வை, சிறுநீர் மூலம் இந்த வைரஸ் வேறு ஒருவருக்குப் பரவும். அதுமட்டுமின்றி, மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய இடத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் இந்தத் தொற்று பரவும். அதிக காய்ச்சல், கடும் தலைவலி, உடல் அசதி, அசௌகரியம் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும்.

 

இந்த மார்பர்க் வைரஸ் பெரிய அளவில் பரவ வாய்ப்பிருப்பதால், அதன் பரவலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், மார்பர்க் வைரஸ் பரவும் ஆபத்து நாட்டளவிலும், பிராந்திய அளவிலும் அதிகமாக இருப்பதாகவும், உலக அளவில் குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்