Skip to main content

“போயிட்டு வரன்னு சொன்னவன் உலகத்தை விட்டே போயிட்டானே” - கதறும் பெற்றோர்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Youth passed away in road accident in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி திருவாச்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பூபாலன் மகன் தனசேகரன் (26) அதே ஊரைச் சேர்ந்த செல்வம் கீரமங்கலத்தில் நடத்தும் பாத்திரக்கடையில் வேலை செய்கிறார். வழக்கமாக மறமடக்கியில் விவசாயிகளிடம் வாங்கும் பூக்களை மொத்தமாக மூட்டையாக கட்டிக் கொண்டு வந்து கீரமங்கலம் பூ கமிசன் கடையில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று புதன் கிழமையும் வழக்கம் போல தனது பைக்கில் பூ மூட்டையை ஏற்றிக் கொண்டிருந்த போது அருகில் நின்றவர்களிடம்  நான் கீரமங்கலம் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். என்னடா என்னைக்கும் இல்லாம போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போறான் என்று அப்பவே பேசிக் கொண்டுள்ளனர்.

கீரமங்கலம் - மறமடக்கி சாலையில் சேந்தன்குடி முந்திரிக் காட்டுக்குள் வந்து கொண்டிருந்த போது எதிரே மேற்பனைக்காடு கிராமத்திலிருந்து குளமங்கலம் நோக்கிச் சென்ற அய்யாவு மகன் கிருஷ்ணகுமார் (வயது 24) வேகமாக வந்த பைக் மோதிய விபத்தில் தனசேகரன் கை, கால், இடுப்பு, தலை என உடல் என அனைத்திலும் படுகாயம் ஏற்பட்டு கிழே கிடந்துள்ளார். அருகில் அவரது பைக்கும் துண்டு துண்டாக உடைந்து கிடந்தது. அதே இடத்தில் தனசேகரன் பலியானார்.

Youth passed away in road accident in Pudukkottai

எதிரே வந்த கிருஷ்ணகுமார் பலத்த காயமடைந்து எதிரே உள்ள பள்ளத்தில் கிடந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கும் கீரமங்கலம் போலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காயமடைந்து கிடந்த கிருஷ்ணகுமாரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தனசேகரன் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தனசேகரனின் மாமா உள்ளிட்ட உறவினர்கள்.. "என்னைக்கும் இல்லாம இன்னைக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் உலகத்தைவிட்டே போயிட்டானே" என்று கதறி அழுதது அங்கு கூடி நின்றவர்களையும் கலங்கவைத்தது. விபத்தில் பலியான தனசேகரன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற  போது அங்கிருந்த மருத்துவர்கள் ஆலங்குடி தாலுகாவில் நடந்த விபத்தில் உயிரிழந்தவரை ஆலங்குடி கொண்டு போகாமல் ஏன் அறந்தாங்கி கொண்டு வந்தீங்க என்று மருத்துவர்கள் கேட்டுள்ளனர். வாழ வேண்டிய ஓர் இளைஞனின் உயிரை இழந்து வந்து நிற்கிறோம். ஆனால் சடலத்தை வைத்துக் கொண்டு அரசு மருத்துவமனையில் எல்லைப் பிரச்சனையை கிளப்புகிறார்கள் என்று வருத்தத்துடன் சென்றனர் தனசேகரனின் உறவினர்கள்.

சார்ந்த செய்திகள்