தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சீட்டு திட்டத்தின் மூலம் 66 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பப்பிரெட்டியூரைச் சேர்ந்தவர் கோபால் (53). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன்மூலம் 3 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் என வருடாந்திர சீட்டு திட்டங்களை நடத்தினார். கடந்த 2015ம் ஆண்டு இவருடைய சீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்ச்சி அடைந்த பின்னரும், 66.65 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் தர்மபுரி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கோபாலை தேடி வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) சேலம் மாவட்டம் வலசையூர் சுக்கம்பட்டி அருகே அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுக்கம்பட்டிக்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு கோபாலை தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.