உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் நடத்திய 'சுஜாதா விருதுகள்' விழாவில் மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜன் (இவரது பெயர்தான் ரங்கராஜனின் புனைப்பெயர்) பேசினார். அப்போது அவர் எழுத்தாளர் சுஜாதாவுடனான தனது வாழ்க்கையின் சில நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சின் ஒரு பகுதி...
"இந்த விழாவை திரு.ஹமீது அவர்கள் (மனுஷ்யபுத்திரன்) கடந்த பத்து ஆண்டுகளாக மிக சிறப்பாக நடத்தி வருகிறார். அதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் கணவர் ஒரு பெரிய எழுத்தாளராக இருக்கலாம், ஆனால், வசந்தபாலன் சொன்னது போல அவர் வாழ்க்கை பூரா 'detached' ஆகத்தான் இருந்தார், எல்லா விஷயங்களிலும். ஒரு சமயம் விநாயகர் சதுர்த்தியின்போது முன்னாடியே பலகாரமெல்லாம் செய்து வைத்துவிட்டு கற்பூர ஆரத்தி மட்டும் காட்டிவிட்டு சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு ஊருக்குப் போனேன். ரெண்டு நாள் கழித்து வந்து பார்த்தால் கற்பூரமெல்லாம் அப்படியே இருந்தது. "என்ன, சுவாமிக்கு ஆரத்தி காட்டலையா?"னு கேட்டேன். "நீ ஒன்னும் பயப்படாத பிள்ளையார் ஒன்னும் கோச்சுக்கமாட்டார்"னு சொல்லிட்டார்.
அவருக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. காலையில் அலுவலகம் போவார், வருவார், வாக்கிங் போவார், ஆறு ஏழு புத்தகங்களை மாற்றி மாற்றிப் படிப்பார். நான் அவருடன் எந்த வாக்குவாதமும் செய்ததில்லை. வாக்குவாதத்தால் எந்த பயனுமில்லை என்று முன்பே சொல்லிவிட்டார். நானும் 'இவர் கூடத்தான் காலம் முழுதும் பயணிக்கப் போறோம். எதுக்கு தேவையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டு' என்று விட்டுவிட்டேன்.
அவர் கதைகளில் பெண்களைப் பற்றி ரொம்ப நல்லா எழுதுவார், புடவை பற்றி அது இதுன்னு வர்ணனையெல்லாம் நல்லா இருக்கும். ஆனா, நிஜத்தில் அவருக்கு ஒரு புடவை கூட வாங்கத் தெரியாது. ஒரு முறை டெல்லி போனார். 'குளிருக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கிட்டு வரச் சொன்னேன். அவரும் வாங்கிட்டு வந்தார், கலர் எல்லாம் போன மாதிரி ஒன்னை. எனக்கு அது சுத்தமா பிடிக்கல. இருந்தாலும் வாங்கி வந்தவர் முன்னாடி சொன்னா மனசு நோகுமேனு அவருக்கு முன்னாடி போட்டுகிட்டேன். அப்புறமா எங்க குடியிருப்புல நடந்த லேடீஸ் க்ளப் எக்சிபிஷன்ல அதை கொடுத்துட்டேன். இவர் எந்த காலத்துலயும் அந்த எக்சிபிஷனுக்கு போகாதவர். அன்னைக்கு என்ன தோன்றியதோ, போனார். அந்த ஸ்வெட்டரை பார்த்துட்டார். என்னிடம் வந்து கேட்டார், ;"ஏன் கொடுத்துட்ட?"னு. நான் சொன்னேன், "எனக்கு பிடிக்கல"னு. "சொல்லிருக்கலாம்ல?" என்றார். நான் காரணத்தை சொன்னேன்.
இப்படி, அவருக்கு பெண்களுக்கு எது பிடிக்கும் என்றெல்லாம் பெரிதாகத் தெரியாது. நல்லவேளையாக அவருக்கு பெண் குழந்தையும் கிடையாது. அதனால கல்யாண கவலையும் இல்லை."