பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழக கேரளா எல்லையில் இரட்டை வாக்குரிமையை தடுக்க அதிகாரிகள் அதிரடி ஆலோசனை நடத்தினார்கள். அதுபோல் பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இரட்டை வாக்குரிமையை தடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், கேரளா இடையே ஏராளமான வாக்காளர்கள் இரட்டை வாக்குரிமை பெற்றுள்ளனர். மேலும் இரு மாநில எல்லைப் பகுதியில் அடிக்கடி சட்டவிரோத செயல்களும் நடந்து வருகிறது. இதனை தடுப்பது குறித்து இரு மாநில போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டுக் குழு நடந்தது.
இக்கூட்டத்தில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், உத்தமபாளையம் டிஎஸ்பி சிவசாமி, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஜாஜகான், உலகநாதன், சுப்புலட்சுமி, இம்மானுவேல் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுபோல் கேரள அரசு சார்பில் இடுக்கி மாவட்ட டிஎஸ்பி இக்பால் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழக-கேரள எல்லையான குமுளி, கம்பம் மெட்டு, மண்டிப்பாறை, மூங்கில் பள்ளம், போடிமெட்டு போன்ற பகுதிகள் வழியாக கஞ்சா மற்றும் எரிசாராயம், போலி மது மற்றும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க இரு மாநில சோதனை சாவடிகளிலும் சோதனைகளை மேலும் தீவிரப்படுத்துவதும் எல்லைப்பகுதிகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இரு மாநில போலீசாரும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதுபோல் முக்கிய பிரச்சனையாக இன்னும் இரண்டு மாதத்தில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் இரட்டை வாக்குரிமை கொண்ட வாக்காளர்கள் பெயர்களை கண்டறிந்து அதனை தடுப்பது என அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கேரளாவைச் சேர்ந்த மேலும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.