Skip to main content

உலக மரபு தினம்; ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

world heritage day celebrated in villupuram district

 

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக மரபு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக மரபு தினம் நேற்று (18.04.2023) கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் ஆகியவை இணைந்து விழுப்புரம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயிலில் உலக மரபு தின விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடியது.

 

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், தொல்லியல் ஆர்வலர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் திருவாமாத்தூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார். இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கோவில்கள் பராமரிப்பு குறித்தும் அதன் முக்கியத்துவத்தையும், நமது பாரம்பரிய பண்பாடுகள் மரபு வழிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

 

தமிழக வரலாற்றையும் குறிப்பாக சோழர் கால வரலாறு, கலை வரலாறு அதன் கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். இதனையடுத்து பேராசிரியர் முனைவர் த. ரமேஷ் திருவாமாத்தூர் கோயில் வரலாறு, கல்வெட்டு செய்திகள் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி கோயில் கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளைப் படித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். கல்வெட்டுகளை எப்படி படிப்பது, எப்படி படி எடுப்பது என்பது குறித்தும் விளக்கினார்.

 

உலக மரபு தினத்தின் நோக்கம் இளைஞர்கள் மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும். அதன் அவசியத்தையும் கோயில் வழிபாட்டோடு வரலாற்று முக்கியத்துவத்தையும் தெரிந்து கொண்டு உலக மரபு தினத்தில் தொன்மையான மரபுச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதை அனைவரும் இன்றைய உலக மரபு நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். உலக மரபு தினம் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்