அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு நேற்றிலிருந்து விசாரணையை தொடங்கி இருக்கிறது. 'அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா?' என திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அதை விமர்சிக்கும் வகையில் 'விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. எதிரிகளோடு சேர்ந்து கொண்டு எடுத்து எடுத்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுக்களும் மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையை சிதைக்கும் என்பதை பல்லாண்டு காலம் அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது' என முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல் இன்று சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்த மாணவிகளின் துப்பட்டாக்கள் வாங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்ச்சிக்கு பின்னர் அவர்களிடம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், ''தமிழகத்தில் கருத்து சொல்ல சுதந்திரம் இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் சரி யாரும் திமுக மாடல் அரசு அரசுக்கு எதிர்ப்பு சொல்லக்கூடாது. சொன்னால் உடனே முரசொலி முரசாக ஒலிக்கும் என்று சொன்னால் தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது. அறிவிக்கப்படாத அவசர நிலை இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.
பாஜக ஏற்கனவே பொதுமக்களிடம் எடுத்துச் சென்று வருகிறோம். பாஜகவின் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இது குறித்து பேசுவார்கள். கருப்பு கலர் துப்பட்டாவை கருப்புக் கொடி என நினைக்கிறார்களோ என்னவோ. அதனால் கருப்பை பார்த்து ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்திருக்கிறார். அரண்டவர் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேய் என்று சொல்வதைப்போல கருப்பாக இருந்தால் கருப்புக்கொடி காண்பிக்க வருகிறார்களோ என்று நினைக்கிறார்கள். காரணம் ஆட்சி அவ்வளவு பெரிய தவறுகளை செய்கிறது. துப்பட்டாவை எடுத்து கருப்பு கொடியாக காண்பித்து விட்டால் என்ன செய்வது என பயப்படுகிறார்களோ என எண்ண தோன்றுகிறது'' என்றார்.