![Woman tried to set fire to Erode Collectorate](http://image.nakkheeran.in/cdn/farfuture/z5wuJ4KSb5MaR06OBhY0eUX1vFeQKTWiYR2xZxz7QhY/1681127404/sites/default/files/inline-images/th-2-2_92.jpg)
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதனால் கலெக்டர் அலுவலகம் மக்கள் நிறைந்து காணப்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு எலவமலை, மூலப்பாளையம், தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்த சரோஜா (55) என்ற பெண் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் மனு கொடுத்து வெளியே வந்த அவர் கலெக்டர் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற சரோசா கூறியதாவது:- எனது அப்பாவுக்கு சொந்தமான நிலம், இடங்களில் எனக்கு சேர வேண்டிய இடத்தை எனது அண்ணன் ஆக்கிரமித்து உள்ளார். அந்த இடத்தில் தற்போது வீடு கட்டி வருகிறார். என்னை அந்த இடத்திற்குள் அவர் அனுமதிக்க மறுக்கிறார். அந்த இடத்தை அவர் ஆக்கிரமித்து என்னை விரட்டி அடிக்கிறார். எனக்கு யாரும் துணை இல்லை. இது குறித்து ஏற்கனவே சித்தோடு காவல் நிலையத்திலும், ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்து இருந்தேன். இதனையடுத்து எனக்கு மிரட்டல் வருகிறது. என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. 30 வருடமாக இவர்களிடம் போராடிக் கொண்டிருக்கிறேன். எனவே இந்த இடத்தில் வீடு கட்டுவதை நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து தீக்குளிக்க முயன்ற சரோஜாவை விசாரணைக்காக சூரம்பட்டி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.