![Woman passed away in nellai police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/wCrbkga5I25Zhr3azpMNJOghg_4hbHvYc2hhBotBDyw/1651663993/sites/default/files/inline-images/th_2196.jpg)
நெல்லைப் பகுதியின் பேட்டையிலுள்ள ரொட்டிக்கடை பஸ் ஸ்டாப்பிலிருந்து பழையபேட்டைக்குச் செல்லும் ஆதம் நகர் எதிர் சாலையோரம் நேற்று மதியம் சுமார் 2 மணி வாக்கில் சடலம் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்த தகவல் பேட்டை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் உள்ளிட்ட போலீசார் தீயை அணைத்து விட்டு முழுவதுமாக எரிந்து கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தவர்கள். மேலும், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
ஆரம்ப கட்ட விசாரணையில் தீயில் கருகியவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும். அவரது கழுத்தில் பதிந்த தடயத்தால், அவர் துப்பட்டாவால் கழுத்து நெரித்துக் கொலை செய்து பின் தீ வைத்து எரித்தது தெரியவந்துள்ளது. ஆனாலும், அந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர். எதற்காக அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார் என்பன குறித்த தகவல் கிடைக்கவில்லையாம்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று தனிப்படையினர் அந்த வழியோர சி.சி.டி.வி.களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதி பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் பழைய பேட்டைப் பகுதியிலிருந்து ஆட்டோ ஒன்றில் வந்திறங்கிய இரு பெண்களில் ஒருவர் மற்றொரு பெண்ணைக் கையைப் பிடித்து திமிரவிடாமல் ரோட்டில் தர தர வென்று இழுந்து கொண்டு சென்று கொலை செய்து பின் பெட்ரோல் ஊற்றி, தீவைத்து எரித்து விட்டு தனியாக வெளியே வந்தவள், பின் ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதனப்படையில் விசாரணையை மேற்கொண்ட தனிப்படையினர் அந்தப் பெண், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டவர்களைத் தீவிரமாகத்தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியின் செல் டவர்லைனில் சம்பவ நேரத்திற்கு முன்னும், பின்னும் பதிவான நம்பர்களையும் ட்ரேஸ் செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சிக்குவர் என்று காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
பட்டப் பகலில் ரோட்டில் ஒரு பெண்னை, ஒரு பெண் எரித்துக் கொன்ற சம்பவம் நெல்லைப் பேட்டைப் பகுதியை அதிரவைத்துள்ளது.