தீபாவளி பண்டிகை முடிந்து 14ம் தேதி இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற ஆம்னி பேருந்து சுமார் 12:30 மணியளவில் திண்டிவனம் வந்தது. அப்போது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளனர். அதில் பலர் போதையில் தள்ளாடினர். அந்த பஸ் திண்டிவனம் தாண்டியதும், பேருந்தில் மது போதையில் இருந்த சில இளைஞர்கள், அந்த பேருந்தில் பயணம் செய்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான பெண், ஓட்டுநரிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்.
ஓட்டுநரும், நடத்துநரும் அந்த போதை இளைஞர்களைக் கண்டித்தும் அவர்கள் அடங்கவில்லை. தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களின் செயல் ஒருகட்டத்திற்கும் மேல் எல்லை மீறிச் சென்றது. உடனே அந்த பெண் விழுப்புரத்தில் உள்ள தனது உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிலர் இணைந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அந்த ஆம்னி பேருந்தின் வருகையை நோக்கி காத்திருந்தனர்.
பின் அந்த வழியாக பேருந்து வந்தபோது, அவர்கள் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றதால் அவர்கள் பேருந்தை விரட்டிச் சென்றனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘பிடாகம்’ என்ற ஊரில் உள்ள அவர்களது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அவர்கள் பிடாகம் பகுதியில் பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்.
பிறகு பேருந்தை விழுப்புரம் புறக்காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது திருநெல்வேலியைச் சேர்ந்த தங்க மாரியப்பன் மற்றும் முகமது யாசர் என்பது தெரியவந்தது. பிறகு அவர்களைக் கைது செய்த போலீஸார் மற்ற இளைஞர்களைக் கண்டித்து பேருந்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மேலும், பெண் புகார் கூறியும் பேருந்து நடத்துநர் நடவடிக்கை எடுக்காததால் பேருந்தின் உரிமையாளருக்கு போலீஸார் தகவல் கொடுத்து காவல் நிலையம் வரவழைத்தனர். பிறகு பேருந்து உரிமையாளரிடம் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட தங்க மாரியப்பன் மற்றும் முகமது யாசர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.