தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் எ.புதுப்பட்டியில் வசித்து வரும் மூக்கையாவின் மாந்தோப்பில் பெருமாள் என்பவர் காவலுக்கு குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் மாந்தோப்பு பாதுகாப்புக்காக வளர்த்து வரும் மூன்று நாய்களில் ஒரு நாய் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணமல்போனது. இந்நிலையில் பல இடங்களில் அந்த நாயை தேடிய போது அந்த நாய் மாந்தோப்பு பகுதியிலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளது.அதை கண்டு பெருமாள் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக கூறி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இயற்கையாக நாய் இறந்ததா அல்லது சிறுத்தை அடித்து இறந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய நிலப்பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் கூறி வரும் நிலையில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் அல்லது சோலார் வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
இது குறித்து தேவதானப்பட்டி வனசரகர் சுரேஷ்குமார் கூறுகையில், விவசாய பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக இதுவரை எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்தால் வனத்துறைக்கு தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இறந்த நாய் சிறுத்தை தாக்கி இறக்கவில்லை ஏதே வேறு காரணம் அல்லது நோய் தொற்று ஏற்பட்டு இறந்து இருக்கலாம் எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இருந்தாலும் அப்பகுதி விவசாயிகள் சிறுத்தையின் பீதியிலேயே இருந்து வருகிறார்கள்.