விவேகானந்தரின் சீடரான நிவேதிதா-150 என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ரத யாத்திரையை அனுமதிப்பது - மதச்சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானது - தமிழ்நாடு அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு: விவேகானந்தரின் சீடர் என்று கூறப்படுபவர், அயர்லாந்தைச் சேர்ந்த நிவேதிதா (இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபல்). அவருக்கு இது 150 ஆம் ஆண்டு பிறந்த நாளாம். அதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அவரின் ரத யாத்திரை புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறது. (2018 ஜனவரி 23 ஆம்தேதி முதல் பிப்ரவரி 25 ஆம் தேதிவரை). இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாயமான் முயற்சியாகும்.
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பியவர் விவேகானந்தர் என்பதுதான் விவேகானந்தருக்குள்ள தனி முத்திரை. அவரின் சீடர் ஒருவரை முன்னிலைப்படுத்தி, தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களுக்குள் திணிப்பது எந்த அடிப்படையில்? இதன் உள்நோக்கம் என்ன? இது மதச்சார்பற்ற கோட்பாட்டுக்கு விரோதமான நடவடிக்கை அல்லவா?
இந்துத்துவாவையும், சங் பரிவார்களையும் மாணவர்கள் மத்தியில் திணிக்கும் நச்சு எண்ணம்தானே இதன் பின்னணியில் உள்ளது. மதச்சார்பற்ற அரசின் கல்வி நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட மதவாத சிந்தனைகளைத் திணிப்பதற்கு தமிழ்நாடு அரசு - அதன் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளதா?
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் மதமாகிய நச்சு விதைகளை ஊன்றினால், அதன் விளைவு என்ன? பெற்றோர்கள் இந்தப் பிரச்சினையில் அலட்சியமாக இருக்கலாமா? இதுகுறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்குக் கடிதம் எழுதவேண்டும். இன்றைக்கு நிவேதிதா என்று ஆரம்பித்தால், ஒவ்வொரு இந்துத்துவவாதியையும் முன்னிறுத்தி ரத யாத்திரைக்கு வழிவகுக்காதா?
இதேபோல, கல்வி நிறுவனங்களில், தந்தை பெரியார் பெயரில் ரத யாத்திரை நடத்திட தமிழ்நாடு அரசு அனுமதிக்குமா? அண்ணா, புரட்சிக்கவிஞர் பெயர்களில் ரத யாத்திரை நடத்திட அனுமதி அளிக்குமா அரசு?
அண்ணா தி.மு.க. என்ற பெயரில் அவர் கொள்கைக்கு விரோதமாக ஆன்மிக அக்கிரகார ஆட்சியை நடத்தலாமா? ஆர்.எஸ்.எசுக்கு அடிபணியலாமா? உடனே இந்த ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.’’