அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையில் கோபிநாத்(57) என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டில் வைத்திருந்த சுமார் ரூ.2,50,000 லட்சம் மதிப்புள்ள 67 கிராம் தங்க நகைகள் கடந்த ஓராண்டாக சிறுக சிறுக காணாமல் போயுள்ளது என அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர் அன்பழகன் பெண் காவலர்கள் திரிபுரசுந்தரி, கோமதி, பிரபா, சுமதி, சங்கரி, ஆகியோர் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பிறகு விசாரணை நடத்திய தனிப்படை, வீட்டு வேலை செய்துவரும் விஜயா(50) என்பவர் தான் சம்பவத்திற்கு காரணம் என்பதை கண்டுபிடித்தனர்.
அண்ணாமலை நகர் கொத்தங்குடி தோப்பை சேர்ந்த விஜயா கோபிநாத்தின் வீட்டில் வேலை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் விஜயா தான், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிறுக சிறுக நகைகளை திருடி தன்னுடைய வீட்டின் முன்புறமுள்ள வாய்க்காலின் அருகே உள்ள மண்ணில் புதைத்து வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். அதன்பிறகு விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.