18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இத்தகைய சூழலில் சில தினங்களுக்கு முன்பு நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோட்டிலும் அதனைத் தொடர்ந்து தென்காசியிலும் இதே போன்று ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தன. இந்நிலையில் மதுரையிலும் வாக்கும் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பழுது அடைந்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரையில் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 11 ஆயிரம் இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆறு கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி 350 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் கட்சியினர் தொடர்ந்து ஸ்ட்ராங் ரூமை கண்காணிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பாயிண்ட் என்பது தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மதுரையில் கடந்த ஒரு மணி நேரமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்ததால் சர்வர் டவுன் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அங்குள்ள அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பல இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு தொடர்ந்து வரும் நிலையில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்னல் தடுப்பு சாதனம் பொருத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறைந்த மின்னழுத்தம் ஏற்படும்போது சிசிடிவி கேமராக்களைப் பாதுகாக்கும் சாதனத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.