நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (27/10/2024) நடைபெற்று வருகிறது. அதிகாலையில் இருந்தே பெரும்பாலான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்குப் வந்த வண்ணம் இருந்தனர். காலை 10 மணிக்கு மேல்தான் உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே தொண்டர்கள் உள்ளே புகுந்து நாற்காலிகளில் இடம் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். தற்பொழுது வரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்குக் கூடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் வி.சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழ்நிலையில் வாகனங்களில் இறங்கி நடந்தே மாநாட்டுப் பகுதிக்குத் தொண்டர்கள் நடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. தடுப்புகளைத் தாண்டி மாநாட்டுத் திடலுக்குள் சில தொண்டர்கள் எகிறிக் குதிக்கும் நிலையும் ஏற்பட்டது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மாநாட்டுத் திடலுக்குச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்திய நிலையில் அங்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்கள் தடுப்புகளை மீறி உள்ளே குதித்துச் சென்றனர். அதேநேரம் வெயில் காரணமாக அங்குப் பலர் அவதி அடைந்து இதுவரை 94 பேர் மயக்கம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியது. கொடி அறிமுக விழாவின் பொழுது வெளியிடப்பட்ட 'தமிழன் கொடி பறக்குது' என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடல் ஒலி பரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த முன்பு ராம்ப் வாக் மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தளபதி, தளபதி என முழக்கமிட்டு உற்சாகப்படுத்தினர். மேலும் தொண்டர்கள் அவரை நோக்கி வீசப்பட்ட அக்கட்சியின் துண்டை வாங்கி தோளில் அணிந்து கொண்டார். இதனையடுத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.