![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/SGLN1w50cUebgth7MnTzdYHmf4qOo5IcSeWINOr64qs/1687615546/sites/default/files/inline-images/we1145.jpg)
மத்திய அரசு வெளியிட்டுள்ள மின்சார விதிகள் திருத்தம் தமிழ்நாட்டில் நுகர்வோர்களை பாதிக்காது எனத் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதி வீட்டு இணைப்புகளுக்கு பொருந்தாது என மின் வாரியம் அறிவித்துள்ளது. மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள் 2020ல் சில திருத்தங்கள் செய்ததன் மூலம் நடைமுறையில் உள்ள மின் கட்டணம் அமைப்பில் இரண்டு மாற்றங்கள் செய்து நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டங்கள் மூலம் தமிழக நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்தின் கட்டணத்தை வசூலிப்பதை விட மின்சார கட்டணம் நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடுவதே டி.ஓ.டி (Time Of Day) கட்டணமாகும்.
இந்த கட்டண முறையின் கீழே சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கும் கட்டணம் நாள் முழுவதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. டி.ஓ.டி நேரம் என்பது ஒரே நாளில் எட்டு மணி நேரம் என்ற அளவில் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிடும் நேரத்தில் அமையும். உச்ச நேரங்களில் கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாற்றம் 2024 ஏப்ரல் ஒன்று முதல் அதிகபட்ச தேவை கொண்ட தொழில்துறை நுகர்வோர்களுக்கும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விவசாய நுகர்வோர்கள் மற்றும் அனைத்து நுகர்வோர்களுக்கு டி.ஓ.டி கட்டணம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடன் இவை அமலுக்கு வரும்.
தமிழகத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் டி.நகர் பகுதியில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் பல இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய விதிகள் மூலம் தமிழ்நாட்டு நுகர்வோர்கள் பாதிப்படைய மாட்டார்கள் எனத் தமிழக மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே இதனால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் தமிழகத்தில் வீடுதோறும் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் திட்டம் எந்த அளவிற்கும் பாதிப்படையாது எனத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.