
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 1 ஆம் தேதி (06.01.2025) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த கூட்டத்தொடர் ஜனவரி 11ஆம் தேதி (11.01.2025) வரை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கலாகிறது எனச் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான அடுத்த கூட்டத்தினை சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வருகிற மார்ச் 14ஆம் தேதி (14.03.2025 - வெள்ளிக்கிழமை) 09.30 மணிக்குக் கூட்டி உள்ளேன்.
அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025- 26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வார். மேலும் 2025- 26 ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கை, 2024-25ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையும் மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார். மேலும் மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.