சேலத்தில் டிசம்பர் 17 அன்று தி.மு.க. இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. இதற்கான முன்னெடுப்புகளை திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில், ஈரோடு வடக்கு - தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் இன்று(21ம் தேதி) கலந்து கொண்டார்.
இளைஞரணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உழைப்பால் உயர்ந்தவர் நமது முதல்வர். யாருடைய காலில் விழுந்தும் முதல்வர் பதவியை பெறவில்லை. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம். அதற்கென குழு அமைத்து, அதன் அடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். நீட் தேர்வு பிரச்சனை என்பது இளைஞரணியின் பிரச்சனை அல்ல. தமிழக மாணவர்களின் பிரச்சனை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட நீட் தேர்வினை அனுமதிக்கவில்லை. அவர் மறைவிற்கு பின் பொறுப்பேற்றவர்கள், ஒன்றிய அரசிற்கு அடிபணிந்து, நீட் தேர்வை கொண்டு வந்து விட்டனர். நீட் தேர்வினால் அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து 21 பேர் இறந்துள்ளனர். இது மக்கள் பிரச்சனை.
நீட் தேர்வு ரத்து திமுக நடத்தும் நாடகம் என்று ஈ.பி.எஸ். சொல்லியுள்ளார். நாடகத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? நீங்கள் எப்படி முதல்வரானீர்கள்? தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? உங்களுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் காலை வாரி விட்டீர்கள். சசிகலாவின் காலைப்பிடித்து முதல்வராகி, அதன் பிறகு அவருடைய காலையே வாரிவிட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. எனவே, எங்களுடைய நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் உரிமையை திமுக காப்பாற்றும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொன்னார்கள். ஆனால், ஒழிக்கவில்லை. திடீரென 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய இந்தியா பிறந்தது என்று சொன்னார்கள். ஆனால் பிறக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று பிரதமர் சொன்னார். அதையும் இப்போது 2047ல் வல்லரசாக மாற்றிக் காட்டுவதாகக் கூறுகின்றனர். இந்திய தணிக்கைக்குழு அறிக்கையில், 9 ஆண்டு பாஜக ஆட்சியில், 7 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.