தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் 7 மாதங்களாகியும் வெளியிடப்படவில்லை. மிகமுக்கியமான இப்போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசுத் துறைகளில் 29 மாவட்ட துணை ஆட்சியர்கள், 34 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள், ஒரு மாவட்டப் பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், 8 மாவட்ட தீயவிப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரி என மொத்தம் 85 முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி வெளியிட்டது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 1.38 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் 4602 பேர் முதன்மைத் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது ஆனால், தேர்வு முடிந்து 7 மாதங்களாகியும் இன்று வரை முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் நடப்பாண்டுக்கான அறிவிக்கை வருவதற்கு முன்பு வெளியிடப் பட்டால் தான், கடந்த ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்கள் நடப்பாண்டுக்கான தேர்வுகளில் பங்கேற்க வேண்டுமா.... வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்பதால் தான் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் தொகுதி தேர்வு முடிவுகள் ஒருபோதும் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டதில்லை.
முதல் தொகுதித் தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக வெளியிடப்படுவதால் அதை எழுதிய மாணவர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். இத்தேர்வுக்குதயாராகும் வாய்ப்புகளும், வசதிகளும் கிராமப்புறங்களில் இல்லை என்பதால் ஊரக மாணவர்கள் சென்னை, மதுரை, கோவை போன்ற நகர்ப்புறங்களில் தங்கி தேர்வுக்கு தயாராகின்றனர். தேர்வில் வெற்றி பெரும் வரை அவர்கள் நகர்ப்புறங்களில் தங்கி பயிற்சி பெற வேண்டும் என்பதால், அதற்கான செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியாது. இதையெல்லாம் உணராத தமிழக ஆட்சியாளர்கள் முதல் தொகுதி தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் அரசு நிர்வாகம் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள ஐயம் என்னவென்றால் முதல்தொகுதி தேர்வு முடிவுகளில் ஏதேனும் முறைகேடு செய்வதற்காகத்தான் காலதாமதம் செய்யப்படுகிறதோ? என்பது தான். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருவதால் இந்த ஆண்டும் முறைகேடுகள் நடக்குமோ? என்ற ஐயம் நியாயமானதுதான். இந்த ஐயத்தை போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்தொகுதி பணிகளுக்கான போட்டித்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, தேர்வு முடிவுகளில் எந்த முறைகேடும் நடைபெறாத வகையில் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு முடிவுகள் தயாரித்து வெளியிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.