தமிழகம் முழுவதும் நேற்று (14.12.2019) நடந்த தேசிய லோக் அதாலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பிலான 65 ஆயிரத்து 199 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்வு காண, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் தேசிய லோக் அதாலத், தமிழகத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் இன்று நடந்த தேசிய லோக் அதாலத், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐந்து அமர்வுகளும், மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 493 அமர்வுகளும், வங்கிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 பிரத்யேக அமர்வுகளும் என, 516 அமர்வுகள், வழக்குளைத் தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
இன்றைய லோக் அதாலத்தில், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள், விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 396 கோடி ரூபாய் மதிப்பிலான 65 ஆயிரத்து 199 வழக்குகள் தீர்வு காணப்பட்டதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.