Skip to main content

‘எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?’ - வெளியான தகவல்!

Published on 20/11/2024 | Edited on 20/11/2024
'Which district schools have holidays?' - The information released

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (20.11.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் (20.11.2024) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதோடு காரைக்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (20.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதே சமயம் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்