கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்த 66 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து விஷச் சாராய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் இன்பதுரை, பாமக சார்பில் கே.பாலு, பாஜக சார்பில் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இது தொடர்பாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (20.11.2024) வழங்கியுள்ளது. அதில், “கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. இதில் எவ்வித குறுக்கீடும் இருக்கக் கூடாது.
இந்த வழக்கை சிஐபி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணைக்காக மாநில காவல்துறையினர் தங்களிடம் உள்ள ஆவணங்களை சிஐபி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் எவ்வித காலக்கெடுவும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.