பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக எழும்பூர் போலீசார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இத்தகைய சூழலில் தான் நடிகை கஸ்தூரியை கடந்த 16 ஆம் தேதி (16.11.2024) ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசார் கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் இருந்து காவல்துறையினர் (17.11.2024) சென்னை அழைத்து வந்தனர். இதனையடுத்து அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில், நீதிபதி ரகுபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ரகுபதி உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கஸ்தூரியை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அதே சமயம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி வழக்கைக் கருணையோடு அணுகுங்கள் என நீதிபதி சுவாமிநாதனின் மனைவியும், மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவருமான காமாட்சி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், “நடிகை கஸ்தூரிக்கு எதிராக பதிவான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதே சமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி மனுஷியாய் அக்குழந்தையைப் போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்துகொண்டேன்.
இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால். நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான் (Special Mother). எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். எனக்கும் என்னைப்போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது. ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையைக் கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஒரு மாற்றுத் திறனாளியின் தாயாகக் கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலைத் தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.