வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே பிரச்சனையால் காளியம்மன் கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் அமைதி குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலையை 21- ம் தேதி பகல் 12 மணிக்குள் கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 22 ஆம் தேதி அரசு சார்பாகச் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து கோவில் வளர்ச்சி மற்றும் கோவில் திருவிழா உள்ளிட்ட அவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும். கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்யும் வகையில் கோவில் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்ற அமைதி குழு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டனர்.
மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் கெம்மங்குப்பம் கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று கே. வி.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையில் காவல்துறையினர் முன்னிலையில் கோவில் கருவறையில் அம்மன் சிலையை வைத்துச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்தனர். இதில் ஒரு தரப்பு மக்கள் மட்டும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மற்றொரு பிரிவு மக்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.