அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா தமிழகம் வந்திருந்த பொழுது “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்'' என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உடன் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்த இடத்தை இன்று நேரில் பார்வையிட்டுள்ளார். அங்கு இன்னும் எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படாததை சுட்டிக்காட்டும் வகையில் ஒரு புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இப்படி தேர்தலுக்கு பிறகு மீண்டும் மதுரை எய்ம்ஸ் குறித்த விவாதங்கள் கிளம்பிய நிலையில், 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவின் மண்டலக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தர்மபுரி வந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், கரோனா பாதிப்பு காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமானதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.