கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி காவல் நிலைய வளாகத்தில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 வேப்ப மரங்கள் இருந்தன. காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அந்த மர நிழலில் அமர்ந்து இளைப்பாறிச் சென்று வருகிறார்கள். இந்த மரத்தைத் திடீரென கடந்த வாரம் வெட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஒரு மரத்தை வெட்டியபோதே ‘நல்லா நிழல் தரும் மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள்’ எனக் கேட்டபோது, மரத்தை வெட்டியவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. ஒரு மரத்தை வெட்டிய நிலையில் அடுத்த மரத்தை வெட்டுவதற்கு முன் பொதுமக்கள் உடனடியாக அங்கு கூட்டமாக வந்து தடுத்து நிறுத்தி மரம் வெட்டுபவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள், வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கலையரசி ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் வட்டாட்சியர் குமராட்சி ஆய்வாளர் அமுதாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அதற்கு அவர் மரக்கிளைகளை மட்டுமே வெட்டி அகற்ற சொல்லிருந்தேன். மரம் வெட்டும் வேலை செய்ய வந்த ஆட்கள் அடியோடு மரத்தைச் சாய்த்து விட்டனர் என்று கூறியுள்ளார். இதற்கு உடனடியாகச் சம்பந்தப்பட்ட இடத்தினை வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆய்வு மேற்கொண்டு வெட்டப்பட்ட மரம் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மரத்தின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் மேலும் பல லட்சங்கள் கொடுத்தாலும் இதுபோன்ற வைரம் பாய்ந்த மரங்கள் கிடைப்பது அரிது எனச் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து குமராட்சி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் சீத்தாராமன், காவல் நிலையத்திற்குள் நல்ல நிலையில் இருந்த 60 வருடங்கள் பழமை வாய்ந்த வேம்பு மரத்தினை குமராட்சி காவல் நிலைய ஆய்வாளர் அமுதா வெட்டுவதற்கு அனுமதி பெறாமல் சொந்த பயன்பாட்டிற்கு வெட்டி உள்ளார். இதனைப் பொதுமக்கள் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். புகார் அளித்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முதல்வர் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், வட்டாட்சியர், உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் புகைப்பட காட்சியுடன் புகார் மனு அளித்துள்ளதாகக் கூறினார். நாடு முழுவதும் பசுமைப் புரட்சி ஏற்படுத்த அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை வைத்துப் பராமரிக்கத் தமிழக முதல்வர் அறிவுறுத்தி வருகிறார். அதேபோல் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர் கலந்துகொள்ளும் பல்வேறு கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தென்னை, மா, பலா, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். ஆனால் வேளாண்துறை அமைச்சர் ஊருக்கு மிக அருகில் உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் நல்ல நிலையில் பொதுமக்களுக்கு நிழல் தந்த பழமை வாய்ந்த மரத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் ஆய்வாளரே வெட்ட உறுதுணையாக இருந்தது வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து தகவல் பெற முயன்றபோது அவர் தொலைப்பேசியை எடுக்க மறுத்துவிட்டார்.