Skip to main content

முறையற்ற தொடர்பால் லாரி பட்டறை உரிமையாளர் சரமாரி குத்திக்கொலை

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

nn

 

எடப்பாடி அருகே, தாயாருடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த லாரி பட்டறை உரிமையாளரை இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குரும்பப்பட்டி வாரக்காடு சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு அக். 5ம் தேதி இரவு, கத்திக்குத்து காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். அந்த இளைஞரின் முதுகு, மார்பு, வலது கை ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

 

இதுகுறித்து கொங்கணாபுரம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாகக் கிடந்த இளைஞர், வெள்ளாளபுரம் சன்னியாசிப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (28) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர், சங்ககிரியில் சொந்தமாக லாரி பாடி கட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.

 

இவருக்கு மனைவியும், 5 வயதில் ஓர் ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. வேலை நாட்களில் ரமேஷ், பெரும்பாலும் இரவில் தனது பட்டறையிலேயே தங்கி விடுவார். இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறை தான் வீட்டிற்குச் செல்வாராம். அதன்படி, பட்டறையில் வேலை முடிந்து அக். 5ம் தேதி வீட்டிற்குச் சென்றபோது தான் மர்ம நபர்கள் ரமேஷை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து, ரமேஷின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி கொங்கணாபுரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்ககிரி டிஎஸ்பி ராஜா அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், ரமேஷை அவருடைய லாரி பட்டறையில் வேலை செய்து வந்த, வெள்ளரி வெள்ளி பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, அவருடைய கூட்டாளி சசிகுமார் (23) என்பது தெரிய வந்தது. இருவரையும், ஈரோடில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

 

அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சசிகுமார் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறை தரப்பில் கேட்டோம். ரமேஷின் பட்டறையில்தான் சசிகுமார் வேலை செய்து வந்தார். பட்டறை வேலை சம்பந்தமாக சசிகுமாரை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு ரமேஷ் அடிக்கடி  சென்று வந்துள்ளார். அப்போது சசிகுமாரின் தாயாருக்கும் ரமேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது.

 

ஒருநாள், தனது பட்டறை முதலாளியும், தாயாரும் வீட்டில் நெருக்கமாக இருந்ததையும் சசிகுமார் பார்த்து விட்டார். அதன்பிறகு ரமேஷின் பட்டறைக்குச் செல்லாமல் திடீரென்று அவர் வேலையை விட்டு நின்று விட்டார். சில மாதங்களாக எங்கேயும் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த சசிகுமார், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் ரமேஷிடம் வேலைக்குச் சேர்ந்தார்.

 

இந்நிலையில் சம்பவத்தன்று சசிகுமாரின் தாயாரைப் பார்ப்பதற்காக ரமேஷ் அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளார். தனது தாயாரை சந்திப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு சசிகுமார் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர், ஒருவழியாக சமாதானம் ஆகினர்.

 

அன்று இரவு, குரும்பப்பட்டி வாரக்காடு பகுதியில் இருவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போதும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சசிகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இந்தக் கொலைக்கு சசிகுமாரின் கூட்டாளியும் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

 

முறையற்ற தொடர்பில் இருந்த லாரி பட்டறை உரிமையாளரை இளைஞர் கொலை செய்த சம்பவம் கொங்கணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்