![flood](http://image.nakkheeran.in/cdn/farfuture/KfkOptMy1L_OLvx0sDJo8a9Xj8p-boKwfZsGZuqVS4M/1636436934/sites/default/files/inline-images/z312.jpg)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாகத் தீவிரமடைந்துவருகிறது. கடந்த நான்கு தினங்களாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கு பிறகும் மழைநீர் தேங்காமல் இருக்க என்னதான் செய்துகொண்டிருந்தீர்கள் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்து சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. பாதி நாள் தண்ணீருக்காகவும், மீதி நாள் தண்ணீரிலும் மக்கள் தவிக்கின்றனர். மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம். சாலையை அகலப்படுத்துவது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.