![What is this college bus? Or love bus?- lady cop warning](http://image.nakkheeran.in/cdn/farfuture/9fMzi2VfXtWA2M5f5jcp-kazJbtdu8gR7NugAbxkqBc/1695801344/sites/default/files/inline-images/a1652.jpg)
சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயங்கும் திருப்பத்தூர், கந்திலி, ஆம்பள்ளி, மாத்தூர் வழியாக செல்லும் டி31 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் ஏறிய பெண் போக்குவரத்து காவலர் ஒருவர், பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பேசும் பெண் காவலர், ''இந்தப் பேருந்தில் இருந்து குறிப்பாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. மகளிர் கல்லூரிக்கு போகிறவர்களும், கரியம்பட்டி காலேஜ் போகும் பசங்கதான் இந்த பஸ்ல அதிகம் போறாங்க. பஸ்ல தேவையில்லாத பிரச்சனைகள் வருகிறது என்று எங்களுக்கு புகார் வந்ததால் இந்த பஸ்ஸுக்கு வந்துள்ளேன். தொட்டு பேசுவது; கிண்டல் அடிப்பது; பார்வையினால் தவறாக சைகை செய்வது என எல்லாவற்றுக்கும் வழக்கு இருக்கிறது'' என பேசிக்கொண்டு இருந்த காவலர், திடீரென கல்லூரி மாணவி அருகில் அமர்ந்து கொண்டிருந்த மாணவனை பார்த்து, 'எழுந்து போ' என எச்சரித்தார். அப்பொழுது அந்த மாணவர் 'இடம் இல்லை' என சொல்ல, ''பேருந்து காலியாக இருக்கும் போது நீ ஏறுன. நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்'' என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''படிக்கும் பசங்க படிப்பதற்கு போவதை தவிர இதெல்லாம் என்ன வேலை. கல்லூரிக்கு நம்பி தானே பெற்றவர்கள் அனுப்புகிறார்கள். நான் அரியர் வைத்திருந்தேன். அரியர் முடித்துவிட்டு நேரா பிஜி பண்ணிட்டு எஸ்.ஐக்கு போய்விடலாம் என நினைத்தேன். அரியர் எழுத ஆரம்பிக்கும் பொழுது டி.என்.யு.எஸ்.ஆர்.பி எனும் சீருடை பணியாளர்கள் ஆணையத்திலிருந்து ஒரு ஆர்டர் வருகிறது. யூஜி முடித்தால்தான் எஸ்.ஐ அட்டென்ட் பண்ண முடியும் என்று சொல்லிவிட்டார்கள். என்னுடைய கனவு சிதைந்து விட்டது. இன்று எனக்கு 50 வயது. 27 வருட சர்வீஸ்.என்னுடன் பிரண்டாக இருந்தவர்கள் எல்லாம் எஸ்.ஐ ஆகி இன்ஸ்பெக்டர் ஆகிவிட்டார்கள். இப்பொழுது டிஎஸ்பி ஆகப் போகிறார்கள். அவர்கள் என்னை கூப்பிட்டார்கள் என்றால் பெயர் சொல்லிதான் கூப்பிடுவார்கள்.
அவர்கள் வைக்கிற வேலை எல்லாம் செய்வேன். இன்றைக்கும் நான் செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் ஆபிஸர். இன்று நான் அவர்களுக்கு கீழே. உன்னுடைய பிரண்டு ஒரு நாள் நல்லா இருப்பாங்க நீங்க காதலால இழந்தத என்னைக்குமே பெற முடியாது. தயவு செய்து இந்த வேலை எல்லாம் இருக்கக் கூடாது. இது என்ன கல்லூரி பஸ்ஸா காதல் பஸ்ஸா. இதெல்லாம் என்ன அட்டகாசம். இந்த ஒரு முறை சொல்லிவிட்டு போகிறேன். இன்னொரு முறை எப்போ வருவேன் என்று தெரியாது. 'பேட் காண்டாக்ட்' என ஒரே ஒரு முத்திரை குத்திவிட்டால் உன் லைஃப் அவ்வளவுதான். அதனால் பாதிக்கப்படுவது நீ மட்டுமல்ல உனக்கு பீஸ் கட்டும் பெற்றோர்கள் தான். அவர்கள்தான் பீஸ் கட்டுகிறார்கள். உங்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள். இன்றைக்கு டிபன் பாக்ஸ் எடுத்து வந்தவர்களில் எத்தனை பேர் நீங்களே செய்து எடுத்து வந்தோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்'' என எச்சரிக்கையுடன் அறிவுரை வழங்கினார்.