![Debt issue youth passed away after recording video](http://image.nakkheeran.in/cdn/farfuture/VG8LK8vIqqDXLxlbxgDGwOEpbp8JNaWlaOgIQ1zn9_A/1656935485/sites/default/files/inline-images/hand-in_226.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் என்கிற தினேஷ்(21). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் பைனான்ஸ் கம்பெனியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுக்கும் பணியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று திடீரென்று தினேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தனது செல்போனில் வீடியோ மற்றும் ஆடியோவில் பேசி விட்டு விஷம் குடித்துவிட்டு தென் கீரனூர் பகுதியில் உள்ள சீனு என்பவரது பாசன கிணற்றில்குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த பரபரப்பு தகவல், நகரம் முழுவதும் பரவியது. கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றிலிருந்து தினேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட தினேஷ், வீடியோவில் பேசியுள்ள தகவலில், ‘நான், வேலை செய்து வந்த பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர் என்னை மனரீதியாக துன்புறுத்தி வந்தார். நான் ஒருவரிடம் கடன் பெற்று இருந்தேன். அதற்காக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு பெற்று செல்போன் மூலம் பரிவர்த்தனை செய்து கொடுத்து விட்டேன். அந்த பணத்திற்கு அதற்கு மீட்டர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் செய்ததோடு என்னை மனரீதியாக தொந்தரவு செய்து வந்தார். அதனால் என்னால் வாழ முடியாமல் விஷம் குடித்து ஒன்றரை மணி நேரம் ஆகிறது. அதோடு தென்கீரனூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனது அம்மா, பாட்டி, சித்தி ஆகியோர் என்னை மன்னிக்க வேண்டும்’ என தினேஷ் பேசிய வீடியோ ஆடியோவில் பதிவாகியிருந்தது.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து தினேஷின் தற்கொலைக்கு காரணமான கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைசேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் பொரசாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தினேஷ் அவர்களிடம் கடன் பெற்ற வகையில் வட்டியும் அசலும் சேர்த்து ஏழரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் கந்து வட்டி, மீட்டர் வட்டி என வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் கொடுத்த இருவரும் ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என தினேஷை மிரட்டி தொந்தரவு செய்து வந்துள்ளனர். அதோடு ஒரு கோடி பணம் தரவில்லை என்றால் பெரும் பிரச்சனை உருவாகும் என்று கடுமையாக மிரட்டியதன் காரணமாகவே மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் இப்போது தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.