!["We welcome the Minister's announcement." - MRP Nurses Association](http://image.nakkheeran.in/cdn/farfuture/4tmvAf4zumxjx2vAUor9N87POeMqcyYxgBZP75Ye4Zw/1654688903/sites/default/files/inline-images/th_2513.jpg)
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச்சங்கம் மற்றும் சமூக சமத்துவத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (08/06/2022) சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராதாமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் வேல் மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் நிரோஷா, குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் அவர்கள், “தமிழ்நாட்டில் எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று, எம்.ஆர்.பி மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. வெறும் ரூ 14,000 மட்டுமே தொகுப்பூதியமாக மாதம் தோறும் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பணிநிரந்தரம் கோரி பல கட்டப் போராட்டங்களை தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் நலச்சங்கம் நடத்தியுள்ளது. ஆனால் அவர்களுக்கு இது வரை பணிநிரத்தரம் கிட்டவில்லை.
இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படும் என்ற தி.மு.க வின் தேர்தல் அறிக்கை நம்பிக்கை அளித்தது. எனவே, தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு பணி நிரந்தரம் வழங்கிடக் கோரி, நேற்று செவிலியர்களின் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. போராடிய செவிலியர் சங்கத் தலைவர்களை அழைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த 6 மாதங்களுக்குள் 5000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதை நாங்கள் மனமாற வரவேற்கிறோம்.
இருப்பினும் 11 ஆயிரம் செவிலியர்களுக்கும் ஆறு மாதங்களுக்குள் பணி நிரந்தரம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ள நிலையில், போராடிய செவிலியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த கவலையை அளிக்கிறது. எனவே, வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” எனக் கேட்டுக் கொள்கிறோம்.