'சத்யம் சினிமாஸ்' திரையரங்கு வரிசையில் சென்னையின் அடையாளம். ஆனால், சத்யம் சினிமாஸின் அடையாளம் என்றால் அது அங்கு மட்டுமே கிடைக்கும் பாப்கார்ன்தான். அந்தப் பாப்கார்னை சாப்பிடுவதற்கெனவே திரைப்படங்களுக்குச் செல்வோர் அதிகம். இப்படி இருக்கும் அந்த சத்யம் சினிமாஸை சமீபத்தில் பி.வி.ஆர். நிறுவனம் வாங்கப் போவதாக அறிவிப்பு வெளிவந்ததும் திரைப் பிரியர்கள் பாப்கார்ன் என்ன ஆகுமோ, சுவை மாறுமோ, விலை ஏறுமோ என்றுதான் அதிகம் கவலைப்பட்டனர். இவ்வளவு பிரபலமான அந்த பாப்கார்னுக்கு சுவை சேர்ப்பது அதனுடன் கலந்துசாப்பிட அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஃபிளேவர் எனப்படும் சுவை கூட்டித் தூள்தான். 'மெக்ஸிகன் ச்சீஸ், சோர் கிரீம் அண்ட் ஆனியன் மற்றும் ஸ்வீட் சில்லி பார்பிகியூ' (Mexicana Cheese, Sour Cream and Onion, Sweet Chili Barbecue) என்று மூன்று ஃபிளேவர்கள் வைக்கப்படுகின்றன. இந்த ஃபிளேவர்கள் வேறு எங்கும், இங்கு சுவைப்பது போன்ற சுவை இல்லை என்கின்றனர் ரசிகர்கள். இதுதொடர்பாக பலபேர் 'இவ்வளவு சுவையான பாப்கான் உங்களிடம் மட்டுமே கிடைக்குது, இதை எப்படி செய்கிறீர்கள் என்று, நிச்சயம் கேட்டிருப்பார்கள். அதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் இப்போது எஸ்.பி.ஐ நிறுவனம் தனது 'ட்விட்டர்' பக்கத்தில். "நெப்ராஸ்காவில் இருக்கும் நதிக்கரையிலிருந்து, ப்ரிஃபெர்ட் பாப்கார்ன் (preferred popcorn) என்னும் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளது. நெப்ராஸ்கா, அமெரிக்காவில் மூன்றாவது பெரும் கார்ன் (சோளம்) பயிர்செய்யப்படும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து வருடங்களுக்கு முன்னரே சத்யம் சினிமாஸ் இந்த இடத்தைக் கண்டறிந்தது எப்படி தெரியுமா? ஒருமுறை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் 'கிரண் ரெட்டி'யும் மேலாளர் 'பவேஷ் ஷா'வும் 'ஹாங்காங்'கில் ஒரு திரையரங்குக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு அமெரிக்க விவசாயியின் கடைக்குச் சென்று பாப்கார்ன் சுவைக்க நேர்ந்திருக்கிறது. அந்த சுவை அற்புதமாக இருந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்தே தொடர்ந்து 15 வருடங்களாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, இங்கு பாப்கார்ன் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.