மது ஒழிப்பு மாநாடு நடத்த விசிக தயாராகி வரும் நிலையில் 'மதுவை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து கட்சிகளும் கைகோர்த்து நிற்க வேண்டிய நேரம் இது; ஜனநாயக சக்திகள் அனைத்தும் மது ஒழிப்பிற்காக ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சாதிய மற்றும் மதவாத கட்சிகளுக்கு அதில் இடமில்லை' என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ''அவர் கட்சி மட்டும் என்னவாம். பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. 36 ஆண்டு காலமாக எங்களுடைய ராமதாஸ் ஆறு இட ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை தொடர்ந்து திருமாவளவன் இழிவு படுத்திக் கொண்டிருக்கிறார். இதனை தவிர்க்க வேண்டும். எங்களாலும் பேச முடியும். அவருடைய கட்சியை பற்றி எங்களாலும் தரக்குறைவாக பேச முடியும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மாநாடு நடத்துவது என்றால் நடத்திக் கொண்டு போங்கள்.
மது ஒழிப்பு என்பது எல்லோருடைய விருப்பம் தான். இந்தியாவில் மது ஒழிப்பு மாநாடு, ஆர்ப்பாட்டம், கூட்டம் என யார் நடத்தினாலும் நாங்கள் அதை ஆதரிப்போம். அந்த வகையில் திருமாவளவன் நடத்தும் மாநாட்டை நாங்கள் ஆதரிப்போம். அவ்வளவுதான். இது எங்களுடைய அடிமட்ட கொள்கை. ஆனால் அவர்கள் அந்த கட்சி இந்த கட்சி என்று பேசுவதையெல்லாம் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மது ஒழிப்பில் நாங்கள் பி.ஹெச்.டி முடித்துள்ளோம். திருமாவளவன் இப்பொழுது தான் எல்கேஜி வந்திருக்கிறார். அவர் இப்பொழுது தான் தொடங்கி இருக்கிறார்.
ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே 1980-ல் இருந்து மது ஒழிப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள திருமாவளவனின் விசிகவை சேர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதற்கு ஒரே காரணம் ராமதாஸ் தான். தொடர்ந்து பாமக நடத்திய போராட்டமும் ஆர்ப்பாட்டமும் தான் காரணம். எங்களுடைய நோக்கமே தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். நீங்கள் மாநாடு நடத்துங்கள் நடத்தாமல் போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மற்ற கட்சிகளை பற்றி குறிப்பாக எங்களைப் பற்றி இழிவுபடுத்தாதீர்கள். உண்மையிலேயே மாநாடு உங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்றால் சகோதரி கனிமொழியை கூப்பிடுங்கள். அவர்தான் மதுவிலக்கை பற்றி தொடர்ச்சியாக பேசி வருகிறார். அவரையும் அழைத்து மாநாட்டில் பேச வைத்து முக்கியத்துவம் கொடுங்கள்'' என்றார்.