![vas](http://image.nakkheeran.in/cdn/farfuture/pOBolJr4zoxfpX5qW5rpK4ViCtrnO_VIB9rVmR8aTGc/1533347686/sites/default/files/inline-images/vasan_0.jpg)
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம், சேலம் விமான நிலையம் விரிவாக்கம் ஆகியவற்றுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவு குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் ஓமலூரில் இன்று (ஜூலை 8, 2018) மாலை விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் இருபெரும் பிரச்னைகளான சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திட்டம், எட்டு வழிச்சாலைத் திட்டம் ஆகியவற்றுக்கு முதலில் மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் சட்ட விதிகளுக்கு புறம்பாக மக்களிடம் கருத்துகளை கேட்காமலேயே, இத்திடங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை அதிரடியாக நடைமுறைப்படுத்தி வருவது வேதனையாக உள்ளது.
இத்தகைய தவறான போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மக்களின் உண்மை நிலையை புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களை அழிக்கும் திட்டம் தேவையா?. இத்திட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போட்டு அச்சுறுத்தி வருகிறது. பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்காக மக்களிடம் கருத்து கேட்பதாக அரசு நாடகமாடி வருகிறது.
சேது சமுத்திர திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் முடங்கிக் கிடக்கும்போது இந்த பசுமைவழிச்சாலைத் திட்டத்தை அவசர அவசரமாக செயல்படுத்த நினைப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கனிம வளங்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லவே அவசரமாக செயல்படுத்துவதாக மக்களிடம் அச்ச உணர்வு உள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்குவதற்கு மாறாக, வாழ்வாதாரம் பறிபோகிறதே என்ற அச்சத்தில் உள்ள விவசாயிள் மீது காவல்துறை உதவியுடன் தமிழக அரசு போர் தொடுப்பது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளத் தவறிய இந்த அரசு, தலைமைச் செயலகத்தில் முடங்கி உள்ளது.
முட்டை மற்றும் சத்துமாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என உண்மை நிலையை கண்டறிய வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.