திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் அருகே இருக்கும் தென்னம்பட்டியில் முரளி என்பவர் பல ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த அம்மாசி என்பவர் டீ குடிக்க சென்றுள்ளார்.
அப்போது டீக்கடையில் முரளியின் மனைவி சண்முகவேல் அம்மாசியிடம் பழைய பாக்கி 150 ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த சண்முகவேலின் கணவர் முரளி ஆத்திரத்தில் அருகிலிருந்த மண் வெட்டியின் கைப்பிடியால் அம்மாசியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அம்மாசியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அதையும் பொருட்படுத்தாத அம்மாசி முரளியுடன் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்த சிலர் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வடமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் முரளி, சண்முகவேல், அம்மாசி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
150 ரூபாய் கடனுக்காக டீக்கடை முன்பு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சமூக இணையத்தள வாசிகள் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிபோல் டீக்கடையை போர் கடையாக மாற்றி விட்டார்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.