தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில், மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த முத்துராமன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் இயங்கிவருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த 2007 ஆண்டு 15.8 மில்லியன் டன் சரக்கு கையாள அனுமதி பெற்றுவிட்டு,தற்போது ஆண்டுக்கு ஆண்டு சரக்கு கையாளுவது அதிகரித்துள்ளதாகவும்,கடந்த 2016-17 ஆகிய ஆண்டில் 44.94 மில்லியன் டன் சரக்கு கையாண்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட சரக்கு கையாளுவதால் சுற்றுசூழல் அதிக மாசடைந்து வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதில், துறைமுகத்தில் சுற்றுசூழல்துறையின் பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தவில்லை என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். கடந்த 2013 ஆண்டு உச்சநீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவில்,தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் நீண்ட நாட்களாக ஒப்புதல் இன்றி செயல்பட்டதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது. மேலும் தொழிற்சாலைகள் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் முத்துநகரம் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாசடைந்த மாநகரம் என அழைக்கப்படுகிறது. மாசு தன்மை அதிகமாக இருப்பதால் நகர்பகுதிகளில் விஷத்தன்மை அடைந்துள்ளது. எனவே தூத்துக்குடி துறைமுகம் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, " மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் , மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரிய பொறியாளர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.