மாசி பங்குனி கோவில் திருவிழா என்றாலே முளைப்பாரி விழா, கொடைவிழா, நாடகம், தெம்மாங்கு இசை நிகழ்ச்சி ஆகியவற்றோடு ஒயிலாட்டத்திற்கும் கட்டாய இடமுண்டு. உடற்பயிற்சிக்குரிய அத்தனை அம்சத்தினையும் உள்ளடக்கிய ஒயிலாட்டத்தினை வயோதிகம் ஆனாலும் இன்றுவரை நிறுத்தாமல் ஆடி வருகின்றார் 81 வயது இளைஞர் ஒருவர்.
தற்பொழுது ஒயிலாட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெற்ற ஆசான் (வஸ்தாபி) இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள ஓரிவயல் கிராமத்தினை சேர்ந்தவர் 81 வயது இளைஞரான பஞ்சாட்சரம். முத்தாலம்மன் கோவிலில் ஆடிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்., " ஒரு கையில் சிறிய துண்டுடன், மறு கையை மடக்கி, நீட்டி ஆடுவது ஓயிலாட்டமாகும். மானாட்டம், மயிலாட்டம், முயலாட்டம், குதித்து குலுங்கும் இடுப்பாட்டம் என எல்லா வகைகளும் இதில் பரிணமிக்கும். கடந்த 1947ல் இந்தியா சுதந்திரம் வாங்கிய போது எனக்கு 10 வயது. அப்போதே எனக்கு ஓயிலாட்டத்தின் மீது பற்று வந்தது.
இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள அத்தனை தேசியத்தலைவர்கள், தியாகிகள் பற்றிய வரலாற்று குறிப்புடன் சொந்தமாக எழுதி பாடல் பாடுவேன். கோயில் விழாக்களில் ராமாயணம், மகாபாரதம், விராடபருவம், பாகவதம் ஆகிய இதிகாச நூல்களின் கதாபாத்திரங்களை உருவகித்தும், கண்முன்னே சிலாகித்தும் பாடல்கள் பாடுவதுண்டு. வீரபாண்டிய கட்டப்பொம்மன், வள்ளிதிருமணம், பவளக்கொடி, அரிச்சந்திரன் உள்ளிட்ட நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளேன். கடந்த மாதம் ஜூன் 25 அன்று மதுரை இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி பட்டமும், பொற்கிழியும் பெற்றுள்ளது சந்தோஷமளிக்கிறது.
கடலாடியில் உள்ள சுற்றுவட்டார கிராமத்தில் ஆர்வமும், மாறாத தமிழ் பற்றும் உள்ள இளைஞர்களுக்கு இலவசமாக ஒயிலாட்டப்பயிற்சி அளித்து வருகிறேன் என்றவர், "ஜெய விஜய கணபதியே, செல்வம் தந்த மதியே, செப்பிடும் தமிழ், கற்பிதம் பிழை பொருத்தருள் கணபதியே என உச்சபட்ச குரலில் பாடியவாறு நடனமாட தொடங்கினார். உற்சாகத்துடன் ஆட்டத்தினை மீண்டும் தொடங்கிய அவருக்கு வாழ்த்துக் கூறிவிட்டு நகர்ந்தோம்.