
விழுப்புரம் மாவட்டம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர் பிரியன். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் 13 வயதில் ஒரு மகளும், பத்து வயதில் ஒரு மகளும், ஒன்பது வயதில் ஒரு மகனும் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதில், பெரிய மகள் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அவருடைய பெற்றோர் வேலைக்காகச் சென்றுவிட்டனர். இளைய மகளும் மகனும் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார்கள். மூத்த மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுவன் (16 வயது), பிரியனின் மூத்த மகள் தனியாக வீட்டில் இருப்பதை நோட்டம் பார்த்து அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின் அச்சிறுமியின் வாயைப் பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டதால் கோபம் கொண்ட அந்த மாற்றுத்திறனாளி சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் அச்சிறுமியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்தனர். அங்கே சிறுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் அருகில் மாற்றுத்திறனாளி சிறுவன் ரத்தக்கரை படிந்த கத்திரிக்கோல் உடன் வெளியே ஓட முயன்றுள்ளார். அவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்துவந்து அந்த மாற்றுத்திறனாளி சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், "அந்தச் சிறுவன் சென்னை அடையாரில் உள்ள மாற்றுத்திறனாளி நலப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தன் சொந்த ஊரில் இருந்துள்ளார். அவனது எதிர் வீட்டில் இருந்த சிறுமியைக் கடந்த ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று அச்சிறுமி தனிமையாக இருப்பது அறிந்து, வீட்டிற்குச் சென்று வன்கொடுமை செய்ய முயன்றபோது சிறுமி கத்தியதால், கோபத்தில் சிறுமியைக் கொலைசெய்துவிட்டு, தப்ப முயன்று பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்" எனத் தெரியவந்துள்ளது.