கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் புதன்கிழமை காலை சாலையில் பெரிய முதலை ஒன்று படுத்திருந்தது. இதனை பார்த்த அப்பகுதிமக்கள் பயந்து ஓடினர்.
இதனையறிந்த அந்த பகுதி இளைஞர்கள் இந்த முதலையின் தலை மீது சனல் சாக்கை தண்ணீரில் நனைத்து போட்டனர். பின்னர் முதலை வேறு எங்கும் செல்லாதவாறு தூரத்தில் இருந்து முதலை மீது கயிற்றை போட்டு ஒரு மரத்தில் கட்டிவிட்டனர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் கஜேந்திரன், புஷ்பராஜ் ஆகியவர் முதலை பிடிக்கும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் அந்த முதலையை பிடித்து அருகில் உள்ள வக்கராமாரி ஏரியில் விட்டனர். இந்த முதலை 10 அடி நீளமும் 100 கிலோ எடையும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று மழைகாலங்களில் அந்த ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளபோது முதலைகள் ஊருக்குள் தொடர்ந்து வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது எனவே இப்பகுதியில் முதலை பண்ணை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.