Skip to main content

ஒருபுறம் திருடன்; மறுபுறம் போலீஸ்! -சீறும் ஸ்ரீவில்லிபுத்தூர்!

Published on 30/07/2018 | Edited on 30/07/2018

 

“போலீஸ்காரர் ஒருவர் இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியுமா?” என்று காவல்துறையினரே நொந்துகொள்ளும் அளவுக்கு, பலப்பல காரியங்களைச் செய்திருக்கிறார் கண்ணன்குமார். 

 

pon

போலீஸ் கண்ணன்

கொலைகாரனும் நானே! கொள்ளைக்காரனும் நானே!

சென்னை எண்ணூரில் போலீஸ்காரராக இருந்தபோது, முகநூல் போட்டோவைப் பார்த்து ஒருவரைக் காதலித்தார். பெண்குரலில் பேசி தன்னை ஏமாற்றியது ஒரு ஆண் என்பது தெரிந்தவுடன்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். சிகிச்சை பெற்று பிழைத்தவுடன், முகநூல் காதலி(?) அய்யனாரை, நண்பர்களை வைத்துக் கொலை செய்தார்.  இந்த வழக்கில், மதுரை மத்திய சிறையில் இருந்தபோது, தேனியைச் சேர்ந்த அக்பர் அலியுடன் பழகினார். சிறையிலிருந்து வெளிவந்ததும், அக்பர் அலியோடு சேர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், பல இடங்களில் வீடுபுகுந்து நகைகளைக் கொள்ளையடித்தார்.  

வழக்கெல்லாம் எதற்கு? வகையாகச் சுருட்டிய காக்கிகள்!

 

அக்பர் அலி

ak

 

கண்ணன் குமாரும் அக்பர்  அலியும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், “கண்ணன் குமாராவது சஸ்பென்ட் செய்யப்பட்டவர். வெளிப்படையாகவே கொலை செய்தார்; கொள்ளையடித்தார்.” என்று நம்மிடம் பொடி வைத்துப் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் நகை வியாபாரிகள் மற்றும் நகைத் தொழிலாளர்கள் சங்கத்தினர், “நகை மீட்பு விஷயத்தில்  விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் கொடுமையிலும் கொடுமையானது” என்று குமுறலை வெளிப்படுத்தினார்கள். 

 

“வீடு கட்டுகிறேன்; செலவுக்காக மனைவியின் 51 பவுன் நகைகளை விற்க வேண்டியதிருக்கிறது.” என்று கண்ணன் குமார் கூற, அவர் ஒரு போலீஸ்காரர் என்பதால், நட்பின் அடிப்படையில் நம்பி வாங்கியிருக்கிறார் நகைத்தொழிலாளி சங்கர். அந்த நகைகளை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நகைப்பட்டறை நடத்தும்  ரத்தினம் என்பவரிடம் தந்து,  ரூ.8 லட்சத்தை வாங்கி,  கண்ணன் குமாரிடம் சேர்த்திருக்கிறார். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில், சூலக்கரை, எஸ்.என்.புரம், கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஊர்களில் நகைகளைக் கொள்ளையடித்தவர்களைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கிறார் எஸ்.பி.ராஜராஜன். 

 

இரண்டு நாட்களிலேயே, கண்ணன் குமாரும், அக்பர் அலியும் பிடிபடுகிறார்கள். விசாரணையின் போது,  நகைத்தொழிலாளி சங்கரையும் ரத்தினத்தையும் கண்ணன் குமார் கைகாட்ட, தனிப்படை போலீசார், வேனில் கூட்டிச் சென்று இருவரையும் அடித்து துன்புறுத்துகின்றனர். சங்கத்தினர் தலையிட்டு, “இந்த நகைகளை வாங்கியதில், மிஞ்சிப்போனால் ரூ.40000 தான் இவர்களுக்கு கிடைத்திருக்கும். திருடர்களைத்தான் பிடித்துவிட்டீர்களே! இரண்டு நாட்களில் ரூ.8 லட்சத்தையும் திருடர்கள் செலவழித்திருக்க முடியாது.

 

திருடர்களிடமிருந்து, கைப்பற்றிய ரொக்கம் எவ்வளவு என்று சொல்லுங்கள். அதில் தொகை எதுவும் குறைவாக இருந்தால், இவர்களிடம் வாங்கித் தருகிறோம்.” என்று தனிப்படையினரிடம் சொல்ல, “அதெல்லாம் எதற்கு உங்களிடம் சொல்ல வேண்டும்?” என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.  “அப்படியென்றால், வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.” என்று சங்கத்தினர் கூற, “நீங்கள் யார் இதைச் சொல்வதற்கு?” என்று வேகம் காட்டியிருக்கிறார்கள். “வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுகிறோம். 51 பவுன் நகைகளைத் தந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் இருவரும் தொலைந்தார்கள்.” என்று குடும்ப உறுப்பினர்களை மிரட்ட, கழுத்தில்,  காதில் கிடந்ததையெல்லாம் கழற்றிக் கொடுத்துவிட்டு,  போலீசாரிடமிருந்து இருவரையும் மீட்டிருக்கிறார்கள். 

 

“பறிமுதல் செய்த நகைகளைக் குறைத்து கணக்கு காட்டிவிட்டு, மீதி நகைகளை அமுக்கிவிடுவது ரெகுலராக நடப்பதுதான்.  விருதுநகர் மாவட்டத்திலோ, திருடர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் ரூ.8 லட்சத்தை  யார் கண்ணிலும் காட்டவில்லை.  எந்தெந்த அதிகாரிகள் பங்கு போட்டுக் கொண்டார்களோ?” என்று சந்தேகம் கிளப்பினார்கள் சங்கத்தினர். 

வைர நகை கவரிங் ஆனது!

 

அய்யனார்

ayyanar

 

தனிப்படையில் இடம்பெற்ற திருத்தங்கல் காவல்நிலைய ஆய்வாளர் ராஜாவை தொடர்புகொண்டோம். 

“சங்கத்துக்காரங்க போலீஸ் மேல புகார் சொல்லுறாங்களா? அந்த ரெண்டு நகைத் தொழிலாளிங்களும் என்ன பண்ணுனாங்க தெரியுமா? திருட்டு வைர நெக்லஸை வாங்கிப் பார்த்துட்டு, இது கவரிங்ன்னு சொல்லி பைக்குள்ள போட்டுக்கிட்டாங்க.  திருடனுங்களையே ஏமாத்திருக்காங்க. அந்த ஒரு நகையோட மதிப்பே ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரம். கொள்ளையடிச்சவன் பணத்தைக் கையிலா வச்சிருப்பான் போலீஸ் பறிமுதல் பண்ணுறதுக்கு?” என்றார். 

 

போலீஸ் திருடன் கண்ணன் குமாரையும், சங்கத்தினர் குற்றம் சாட்டும் போலீசாரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும்போது,  இப்படிச் சொல்லத் தோன்றுகிறது - 

நேரடியாகவும் திருடுகிறார்கள்: சீருடை அணிந்து, மனசாட்சி என்பதே இல்லாமல்,  முறைகேடான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். காக்கிகளில் சிலர் இப்படித்தான்!

சார்ந்த செய்திகள்